ஞாயிறு, ஜனவரி 18, 2015

சி. விமலனின் “ஏழிசை கீதமே” நூல் வெளியீடு




உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சி. விமலன் எழுதிய “ஏழிசை கீதமே” என்ற தமிழ் திரைஇசைப்பாடல்கள் குறித்த பதிவுகள் அடங்கிய கட்டுரை நூல், கவிஞர் த. ஜெயசீலன் தலைமையில் 18.01.2015 மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறையில் அமைந்துள்ள ‘ஞானாலயம்’ மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி ஶ்ரீ தர்சனன் நிகழ்த்தினார். மதிப்பீட்டுரையை இசையமைப்பாளர் ஷப்தமி கலைக்கூடம் திரு கோ. சத்யன் (முரளி) நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் சி. விமலன் நிகழ்த்தினார். நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்...
 (படங்களும் பதிவும் :சு. குணேஸ்வரன்)















சனி, ஜனவரி 17, 2015

ஊறத் தொடங்கி இருக்கும் இசைஊற்று


-       த.ஜெயசீலன்

   வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கலை, விளையாட்டு, இசைத்துறைகளில் ஈடுபாடுடைய இளைஞனான சி.விமலனின் மூன்றாவது படைப்பாக வெளிவருகிறது ‘ஏழிசை கீதமே’ என்ற இவ் இசைநூல்.

    ஈழத்துக் கலை இலக்கிய வெளியீடுகளில் இசை பற்றிய நுண்பார்வையுடன் நூல்கள் வெளிவருவது அரிது. அதிலும் சினிமாப் பாடல்களை, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இரசித்தபடி -அரங்குகளில்… அவை தீண்டத்தகாதவைகள், அவை இசை வகையே அல்ல என்று முழங்கும் படைப்பாளிகள் மத்தியில் சினிமாப்பாடல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் வெளிவருகின்றமை புதுமையானது. எமது சூழலில் இது ஒரு புதுமுயற்சி. விமலனே தன் முன்னுரையில் குறிப்பிட்டது போல ‘இது ஈழத்தில் தமிழ்த் திரை இசைப்பாடல்கள் குறித்த ஆய்வுகளுக்கான ஒரு முன்வரைவு’ எனலாம்.
   
    திரையிசைப் பாடல்கள் குறித்து அவ்வப்போது இவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூலுருப் பெற்றுள்ளன. இவற்றில் அனேகமான கட்டுரைகள் இணையத்தளத்திலும், முகநூலிலும் வெளிவந்து பலரது பாராட்டுக்களை, கருத்துப்பகிர்வுகளைப் பெற்றிருக்கின்றன. சில சஞ்சிகைகள், பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டும் உள்ளன.

     இவருடைய நூல் மறைந்த தமிழ்த் திரையிசைப் பின்னணிப் பாடகி சுவர்ணலதாவுக்கு சமர்ப்பணமாக்கப் பட்டிருக்கிறது. தொடர்ந்து பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது. ‘பல்லவி’யில் முன்னணி இசையமைப்பாளர்கள் குறித்தும்,‘அனுபல்லவி’யில் பின்னணிப் பாடகர்கள் குறித்தும், ‘சரணத்தில்’ அனேகமாக பாடல்இசை, பாடல் வரிகள், இசைநிகழ்ச்சிகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைகளினதும் மையக்கருத்துக்கு பொருந்தியதான தமிழ்த் திரையிசைப் பாடல்களின் ஆரம்ப வரிகளையே அவற்றின் தலைப்பாகவும் சூட்டியுள்ளமை ரசனைக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது. இதில் அடங்கியுள்ள பன்னிரெண்டு கட்டுரைகளும் அனேகமாக அவரது தனிப்பட்ட இரசனையை அடிப்படையாகக் கொண்டன. எனினும், தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி ஓரளவு நடுநிலை மனப்பாங்குடன் தன் கருத்துக்களை இவர் பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

     எனது தலைமுறையின் அல்லது எமது வயதை ஒத்தவர்களின் அறிவுக்கு எட்டிய காலம் என்பது 80கள்தான். அக்காலத்தில் சினிமா இசைத்துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, நவீன தொழில்நுட்பக் கருவிகளின் உள்வருகையுடன், தமிழிசை மற்றும் எமது கிராமிய இசை நவீன இசையின் கூறுகளைக் கலந்த, மேற்கத்திய பாரம்பரிய செவ்வியல் நுட்பங்களைக் கொண்ட, தனித்துவ இசை ஒன்று ஊற்றாகிப் பெருகிப் பரவிக் கொண்டிருந்தது. அது இசைஞானி இளையராஜாவின் பொற்காலம்.

     நாங்கள் அனேகமாக எல்லோரும்… யாருடைய இசை, என்னவகை இசை, என்ன ராக அடிப்படை என்ற எவ்விதமான அறிவுமில்லாமல் அந்தக்கால சினிமாப் பாடல்களின் காந்தக்கவர்ச்சியில் கட்டுண்டு கிடந்தோம். பாமரரும் வியந்த அவரது இசை, இசைவல்லுனர்களுக்கும் பெரும் ஆச்சரியங்களாகத் திகழ்ந்ததுண்மை. ‘சிறுவர்களாக இளையராஜாவின் தாலாட்டைக் கேட்டவர்கள் இன்று அப்பாக்களாகி விட்டார்கள். எனினும் இன்றும் இளையராஜாவின் தாலாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறது’ என்று எவரோ கூறியது நினைவுக்கு வருகிறது.

    RECORDSகள் காலாவதியாகிப் போக கசற்றுகளின் அறிமுகம், STEREO துல்லிய ஒலிப்பதிவு, இறுவெட்டுக்களின் வருகை என வானொலிப்பெட்டிகளின் முன் அமர்ந்து “எப்போது கேட்போம்” என்று K.S.ராஜாவிடமும், மயில்வாகனம் சர்வானந்தாவிடமும், ராஜேஸ்வரி சண்முகத்திடமும், B.H.அப்துல் ஹமீதிடமும் தவமிருந்த எமது தலைமுறையினரின் கைகளுக்குள், காதுகளுக்குள், கனவுகளுக்குள், வீடுகளுக்குள், ஊர்களுக்குள், தமிழ்நாட்டின் அன்றைய சினிமாஇசை வலம் வரத் தொடங்கியது. ஆரம்பகால தமிழ்ச் சினிமா இசையை தமிழர்களின் இதயங்களுக்குள் கொண்டு சென்ற வானொலிகளின் வரலாற்றில் இலங்கை வானொலிக்கு மறுக்க முடியா இடம் இருந்ததை பல தமிழ்நாட்டவர்களே குறிப்பாக இசையமைப்பாளர்களே ஒப்புக் கொண்டிருந்தமை இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது.

    12 பாடல்கள் (TDK, maxell 60யில்) அல்லது 18 பாடல்கள் (TDK, maxell 90யில்) பதிவு செய்யக் கூடிய நிலையில் ஒவ்வொரு பாடகர்களது தனித்தனியான தெரிவுகள், சோடிப் பாடல்கள், சோகப் பாடல்கள், பழைய பாடல்கள்,புதிய பாடல்கள், துள்ளிசைப் பாடல்கள், பக்திப்பாடல்கள் போன்ற வெவ்வேறு வகைப் பாடல்களைத் தெரிந்தெடுத்து ஒலிப்பதிவு செய்து கேட்டு இரசித்த நினைவுகள் எமது தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் பொருத்தமானதும் பொதுவானதும்தான்.

    அன்றைய நினைவுகள் மிகப் பசுமையானவை. வேறு கலை ஊடகங்களின் தாக்கம் அதிகம் இல்லாத அப்போதுகளில் நாம் பதிவு செய்து எமக்குக் கிடைத்த பாடல்கள் விஸ்வரூபம் கொண்டு வயதுவேறுபாடின்றி எம் அனைவரதும் மனங்களிலும் இடம் பிடித்துக்கொண்டன. இதன் தொடர்ச்சியாக பின்வந்த வெவ்வேறு காலகட்டங்களில், சினிமா இசையில் ஏற்பட்ட வடிவ, தொழில்நுட்ப, நவீன மாற்றங்களும் வேறுபாடுகளும் மிகச் சுலபமாக இனங்காணப்பட்டு ஒப்பீடு செய்யப்பட்டு சாதாரணர்களாலும் அவை பற்றிக் கருத்துக்கூறக் கூடிய நிலைதோன்றியது. என்ன பாட்டு, என்ன படம், யார் நடிகர், யார் பாடகர், யாரின் இசையமைப்பு என்று பாடலைக் கேட்ட நொடியிலேயே சொல்லும் பலர் தோன்றினார்கள். இடைக்காலப் பாடல்களில் சந்தேகம் ஏற்படும் போது முறையாக இசையறியாத கேள்விஞான இரசனை மட்டுமே உள்ள என்னிடம் எனது வாடிக்கை ஒலிப்பதிவுக் கூடத்தினர் பலவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கும் இதில் சிறிதளவு அறிவு இருந்தது.

    இன்றும், இளையராஜாவின் இசைக்கு மட்டும் இரசிகர்களாக இருக்கும் என்னைப் போன்ற எண்ணற்றவர்களும் ஒரு ஒப்பீட்டு நோக்கில் வெவ்வேறு இசையமைப்பாளர்களின் தமிழ்ச் சினிமா இசையை, ஆங்கில, ஹிந்திப் படப் பாடல் இசையை( ‘குர்பாணி’, ‘ஏக் துஜே கேலியே’ போன்ற நன்கு பிரபலமான) இரசிக நிலையில் நன்கு துய்த்து இரசித்து அது பற்றிய குறைநிறைகளை ஆரோக்கியமாக உரையாடியதனைக் காண முடிந்தது. பழைய பாடல்கள் பொதுவாக இந்தப் போட்டிகளுள் வருவதில்லை. நாங்கள் ஒருசிலர், சினிமா இசையால் நெருங்கிய நண்பர்கள், ஒரே இரசிப்புடையவர்கள், இடைக்கிடை கூடி எமக்குவப்பான இடைக்காலப் பாடல்களை நேரம் நகர்வது தெரியாமல் கேட்டு இரசித்து சிலாகிப்பதை தற்போதும் தொடர்கின்றோம்.

    இந்த அடிப்படையில் உண்மை உணர்வுகளை, இரசனை முடிபுகளை, பிறரோடும் பகிர விரும்பும் படைப்பாளி என்ற ரீதியில் சி.விமலன் 80களில் ஏற்பட்ட பொற்காலத்தையும் அதனைத் தொடர்ந்து தமிழ்ச்சினிமா இசைத்துறையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களைப் பற்றியும் பன்னிரெண்டு கட்டுரைகள் படைத்திருக்கிறார்.

    இந்நூல், தமிழ்ச் சினிமா இசை பற்றிய பல்வேறு நுணுக்கமான விடயங்கள் தொடர்பாக அவரைத் தேடத் தூண்டியிருப்பதுடன், இன்றைய நவீன தொடர்பாடல் வழிகளினூடாக நல்ல இசை இரசிகர்களை அவருக்கு நண்பர்களாகத் தந்துமிருக்கிறது. அவரது முகநூலில் இசை இரசனை மிக்க பல தரமான இரசிகர்கள், சுவைஞர்கள் அவருடன் தொடர்பில் இருப்பது இதற்குச் சான்றாகிறது.

    தமிழ்ச் சினிமா இசையின் தாக்கம் என்பது கடந்த 70 - 80 வருடங்களாக உலகெங்கிலுமுள்ள சகல தமிழர்களிலும் ஏதோ ஒரு விதத்தில் செல்வாக்குச் செலுத்தியே வந்திருக்கிறது. சினிமாப் பாடல்களைக் கேட்பதே இல்லை என்றும், சினிமா இசை தரந்தாழ்ந்தது என்றும் கூறிக் கொள்ளும் அதிமேதாவிகள், நடிப்புச்சுதேசிகள் கூட ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு காலத்தில், சினிமாப்பாடல்களின் செல்வாக்கிற்கு உட்பட்டே இருந்திருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

    எண்பதுகளில் கசற்றுகளில் பாடல்களைப் பதிந்த நிலைமையிலிருந்து மிகக் குறைந்த முப்பது ஆண்டுகளுக்குள் தொழில்நுட்பம் பெரும் மாறுதலுக்கு உள்ளாகியிருப்பதைப் பார்க்கின்றோம். தொண்ணூறுகளில் C.Dகள் புழக்கத்திற்கு வந்து, பின் MP 3, MP 4 எனமாறி இன்று i Pod / SMART PHONE களில் சுமார் 2000 பாடல்களைக் கூட தரவேற்றி அவற்றை மிகமிக துல்லியமாகக் கேட்கக் கூடிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதுவும் சினிமாப்பாடல்களின் பரவலான இரசிப்புக்குக் காரணமாக அமைந்து உள்ளது. ஒரு காலத்தில் ‘ஓஹோ’ என இயங்கிய ஒலிப்பதிவு நிலையங்கள் பல மூடுவிழா கண்டு விட்டன. என்றாலும் இலகுவாக பெறக்கூடிய இறுவெட்டுகளாலோ அல்லது சுலபமாகப் பாடல்களைத் தரவிறக்கியோ இன்றும் பாடல்களைக் கேட்க முடிகிறது. நெடுந்தூரப் பிரயாணங்களுக்கு வழித்துணையாக வருபவை சினிமாப் பாடல்களே. அதேபோல இன்றைய F.M வானொலிகளும் சரணாகதி அடைந்திருப்பதும், தங்கியிருப்பதும் சினிமாப் பாடல்களிடம் மட்டுமே.

    இந்த அசுர வளர்ச்சி பல்வேறு வகையான பாடல்களைக் கேட்கவைத்த அதேநேரம் பிரதிபண்ணுபவர்களைப் பற்றியும், ஒரு பாடலின் செல்வாக்கால் தோன்றிய ஆனால் தனித்தன்மையுடனான பாடல்களைப் பற்றியும், உண்மையான போலியான படைப்புகளைப் பற்றியும், எந்தப்பாடலின் நதிமூலம் எது என்ற வாதப்பிரதிவாதங்களையும், தொழில் நுட்பம் தாண்டிச் சிலகாலம் மட்டும் எல்லோரையும் தலைவிரித்துக் குத்தாட்டம் போட வைத்துவிட்டுப் போன இடம் தெரியாமல் பொசுக்கென்று மறைந்து போகும் பாடல்கள் போலில்லாமல் என்றும் கேட்டு இரசிக்க வைக்கும் எமது அன்றாட வாழ்வோடு கலந்து நிற்கும் இசை எது என்பதைப் பற்றியும், உணரவும் தேடவும் செய்திருக்கிறது.

    இந்தச் சூழலில் ‘ஏழிசை கீதமே’ ஏதோ ஒரு விதத்தில் அல்லது முழுநேர வேலையாக இல்லாமல் சினிமா இசையின் இரசிகராக, சுவைஞராக இருப்பவர்களுக்கு ஒரு உசாத்துணையாக அமையும் தகுதி படைத்ததாகிறது. இந்நூல் பல்வேறு, சாதாரணமாக அறியக் கிடைக்காத தகவல்களை, சம்பவங்களை, குறிப்புகளைக் கொண்டுள்ளது. இது தொடர்பான தொடர்ச்சியான தேடல் இவரை மேலும் வளப்படுத்தியும் இருக்கிறது. இந்நூல் நெடுக இறைந்து கிடக்கும் பல்வேறு தகவல்கள் விமலனின் பலன் எதிர்பாராத சினிமா இசை மீதான ஆர்வத்தையும் காட்டுகின்றன.

    ‘பல்லவியில்’ உள்ள முதற் கட்டுரை ‘ஒரு கொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா…’ தமிழ் திரைப்படங்களில் ஒரே பாடல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மெட்டில் இசையமைக்கப்பட்ட சந்தர்ப்பங்களைப் பற்றியும், அடுத்த கட்டுரை ‘ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்…’ ஒரு மெட்டில் வெவ்வேறு இருபாடல்கள் இடம்பெறுவது பற்றியும் பேசுகிறது. ‘உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு…’கட்டுரை இரு ஒஸ்கார் விருதுகளை வென்ற A.R. ரஹ்மானின் மேதமையை, அவரின் தனித்தன்மையைப் பேசுகின்ற அதேவேளை நான்காவது கட்டுரையான ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்…’ இன்றும் இசைராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இசை விஸ்வரூபத்தைப் பற்றியும் பேசுகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதிகளில் பெரும்பாலான மக்களின் மனங்கவர்ந்த தமிழ்ச் சினிமா இசையமைப்பாளர்கள் இசைஞானி மற்றும் இசைப்புயல் என்போரே என்பதை இக்கட்டுரைகள் கோடிட்டுக் காட்டி நிற்கின்றன.

    ‘அனுபல்லவியில்’ உள்ள ‘நல்லதோர் வீணை செய்தே…’புதுப் பாடகர்களின் வரவு குறித்தும் இசையமைப்பாளர்கள் அவர்களுக்குப் பொருத்தமான பாடல்களைத் தான் வழங்குகின்றார்களா என்பது குறித்தும் கேள்வி எழுப்புகின்றது, ‘உன்னிடம் மயங்குகிறேன்…’ K.J.ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் பற்றியும், ‘தியாகராஜரின் தெய்வ கீர்த்தனம்…’ உன்னிகிருஸ்ணனை முன்னிறுத்தி கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்களையும், சங்கீதத் துறையில் கொடிகட்டிப் பறந்து சினிமா இசையிலும் வெற்றி பெற்ற பாடகர்கள் பற்றியும் கூறுகிறது.

    ‘சரணத்திலும்’ சிந்தனைக்கு விருந்தான கட்டுரைகளாக அமைகின்றன ‘பல்லவியே சரணம்…’, ‘தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்’ என்பன.

    இவ்வாறு ஒவ்வொரு கட்டுரைகளும் வித்தியாசமான வெவ்வேறு கோணங்களில் தமிழ்ச் சினிமா இசையை பேசிச் செல்கின்றன. இந்த நூலின் எதிர்கால வெற்றி, இன்னுமின்னும் பேசப்படாமல் புதைந்து கிடக்கும் தமிழ்ச் சினிமா இசையின் சுவாரஸ்யமான பல பக்கங்களை விமலனை தேட வைக்கும் என நம்புகிறேன்.

    மிக அண்மையில் இசைப்புயல் A.R.ரஹ்மானின் பேட்டியொன்றை வலைத்தளத்தில் படிக்க நேர்ந்தது. அப்பேட்டி அச்சு ஊடகங்களிலும் ஒருவேளை வெளியாகியிருக்கலாம். அதில் தான் அண்மையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஈரானியப் படத்திற்காக அதன் இயக்குநருடன் கலந்துரையாடிய போது அவ் இயக்குநர் ‘உங்கள் மொழியில் உங்கள் வாழ்க்கையைச் சொல்லும் படங்களுக்கு ஏன் அந்நிய இசையைப் பயன்படுத்துகிறீர்கள்’ என்று தன்னைக் கேட்டதாகவும், அதைப்பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருந்த போது ‘காவியத் தலைவன்’ வாய்ப்புக் கிடைத்ததாகவும் அதில் எங்கள் இசையைப் புதுமையாகப் பயன்படுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

     நமது மண்ணின் பாரம்பரியத்தை, வாசத்தை, வாழ்வைக் கூறும், இசையை உயிர்ப்புடன் தனது சுமார் ஆயிரம் படங்களில் தந்து, இன்றும் தந்துகொண்டிருந்தாலும் உலகளாவிய ரீதியில் உரிய அங்கீகாரத்தைப் பெறாத இசைஞானி இளையராஜாவின் இசையினதும் இந்த மண்ணில் வெளிவந்த படங்களுக்கும் மண்ணோடு ஒட்டாத ஆனால் நவீன உலகிற்குரிய தொழில்நுட்பத்துடன் கூடிய இசையை வழங்கி ‘எல்லோரினதும் கைகூடாக் கனவான’ இரு ஒஸ்கார் விருதுகளைப் பெற்றுக் கொண்ட A.R.ரஹ்மானின் இசையினதும் வெற்றி தோல்வி, பிரபலம் பிரபலமின்மை, அங்கீகாரம் கணக்கெடுக்கப்படாமை போன்றவற்றின் பின்னே உலகமயமாதல், சமூக சமய பொருளாதாரக் காரணிகள், பல்தேசியக் கம்பனிகளின் ஆசீர்வாதங்கள், உலகந் தழுவிய அரசியல், உள்ளுர் அரசியல் என்பன மறைந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பானது. ‘தனித்துவங்கள், தனித்துவ அடையாளங்களைச் சிதைத்தல்’ என்ற உலகை ஏப்பமிடும் பூதாகரமான சிந்தனைச் செயற்பாடுகள் எங்கும் எதிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தமிழ்ச் சினிமா இசையும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள சில தந்திரங்களைச் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததே என்றும் தோன்றுகிறது.

     ஆனால் நல்ல, தரமான, காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்ற, நம் மண்ணோடு ஒட்டிய, மரபு வழிவந்து கொள்வன கொண்டு விடவேண்டியன விலக்கிய, நம் வாழ்வின் உயிர்ப்பை தானும் கொண்டிருக்கின்ற, எம் இதயத்துக்கு நெருக்கமான, எங்கள் கவலைகள் துன்பங்களை மறக்கச் செய்து எமக்கு புத்துயிர்ப்பூட்டி வேறொரு தளத்துக்கு அல்லது உலகுக்கு எம்மைக் கொண்டுசென்று எமது மனதுக்குச் சாந்தியை அழியாத நிம்மதியைத் தருகின்ற, இதமான, பதமான, பரவசமான, இசை… காலம் கடந்து வாழும் என்றால் மிகையில்லை. இது தமிழ்ச் சினிமா இசைக்கும் பொருந்தும் என்பது என்கருத்து.

    இந்த அடிப்படையில் தமிழ்ச் சினிமா இசையின் கடந்த மூன்று தசாப்த காலப் போக்குகளின் சில கூறுகளை எடுத்துக் காட்டும் ஈழத்தில் இருந்து வெளிவருகின்ற சி.விமலனின் ‘ஏழிசை கீதமே’ ஒரு முத்தாய்ப்பாக, முக்கிய படைப்பாக வெளிவருகிறது என்பேன். இதில் உள்ள கட்டுரைகள் இணையம், முகநூலில் ஏற்கனவே ஓரளவு பரவலான வாசிப்பு விவாதங்களுக்கு உள்ளாகியிருப்பதால் தமிழ்ச் சினிமா இசை தொடர்பான ஆரோக்கியமான நற்சூழல் அல்லது வெளி ஒன்று நம்முன் உருவாவதற்கான வாய்ப்பை ‘ஏழிசை கீதமே’ ஏற்படுத்தும் எனவும் நம்புகிறேன்.

(சி. விமலனின் ‘ஏழிசை கீதமே’ நூலுக்கு கவிஞர் த.ஜெயசீலன் அவர்கள் எழுதிய அணிந்துரை)
---

பொ. கருணாகரமூர்த்தியுடனான சந்திப்பு




உயில் மற்றும் சித்தம் அழகியார் இலக்கிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் 16.11.2014 ஞாயிறு மாலை பருத்தித்துறை ஞானாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பொ. கருணாகரமூர்த்தியின் இரண்டு நூல்களான அனந்தியின் டயறி, பெர்லின் நினைவுகள் ஆகிய நூல்களின் அறிமுகநிகழ்வும் படைப்பாளியுடனான சந்திப்பும் இடம்பெற்றது. நிகழ்வில் நூல் பற்றிய உரைகளை ஜி.ரி கேதாரநாதன், சு. குணேஸ்வரன்,சித்திராதரன் ஆகியோர் நிகழ்த்தினர். பொ. கருணாகரமூர்த்தியுடனான உரையாடலும் இடம்பெற்றது.