ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

மல்லிகை ஜீவாவிற்கு மகுடம் சூட்டிய அஞ்சலி நிகழ்வுசெகா. சிவா

 பிரபல படைப்பாளியும், இலங்கையில் சிறந்த மாதாந்த சஞ்சிகைகளில் ஒன்றாக சிறந்து விளங்கிய மல்லிகையின் ஆசிரியரும், மல்லிகைப் பந்தலின் பதிப்பாசிரியரும், பொதுவுடமைக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் என்பவற்றைக் கடந்து நல்ல பண்பாளர் என்று அடையாளம் செய்யப்பட்ட அமரர் ஜீவாவின் அஞ்சலியும், நினைவுப் பகிர்வும்  ‘உயில்’ குழுமத்தினால் பருத்தித்துறை, ஞானாலயம் மண்டபத்தில் 07.02.2021 ஞாயிறு மாலை 3.15 அளவில் இடம் பெற்றது. டாக்டர் முருகானந்தன் அவர்கள் அமரரின் படத்திற்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவையோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 நிகழ்வை தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்த கொற்றை பி. கிருஷ்ணானந்தன் கொரோனா என்கின்ற வைரஸின் தாக்கம் இல்லாதிருந்தால் அமரர் ஜீவாவின் இறுதி நிகழ்வு,  பிரமாண்டமாக நடைபெற்றிருக்கும் என்றும், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், தவிர்க்க முடியாத சூழலில் குறைந்த எண்ணிக்கையுடன் சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து இக்கூட்டம் நடைபெறுகின்றது என்ற கருத்தையும்  முன்வைத்து தனது பேச்சை தொடங்கினார். ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியதுடன், 100 வயதை எட்டுவதற்கு சில வயதுகள் முன்னராக காலமாகி இருக்கின்றார். அவரின் கனவு 50 ஆண்டுகள் மல்லிகை வரவேண்டும் என்பதே. ஆனால் 48 ஆண்டுகள் தொடர்ந்து மல்லிகையை வெளியிட்டுள்ளார். இது ஈழத்தில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் வெளியாகின்ற கலை, இலக்கியச் சஞ்சிகைகளுடன் ஒப்பிடும்போதுகூட அவரின் நீண்ட காலச் செயற்பாடு ஒர் இலக்கியச் சாதனையாக விளங்குகின்றது. என்ற தொனிப்படப் பேசி, அவரின் சிறப்புக்களையெல்லாம் கோடிட்டு, அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதை நினைக்கப் பெருமைப்படுவதாக கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

     அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய டாக்டர் முருகானந்தம், தனக்கும் ஜீவாவிற்கும் ஏற்பட்ட தொடர்பைப் பற்றிக் கூறலாம் என ஆரம்பித்து, தனது மாணவப் பருவத்தில் பெரியார் போன்ற முற்போக்காளரின் சிந்தனையால் கவரப்பட்ட தான், கல்கண்டு, அம்புலிமாமா போன்ற சஞ்சிகைகளின் பின் ஈழத்துச் சஞ்சிகையான மல்லிகையை ஆரம்பகாலம் தொடக்கம் வாசித்து வந்ததாகவும்,  பின்னர் அவருடனான தொடர்புகள் நீடித்ததாகவும், அவரின் பிறந்தநாள் ஒன்றின்  கூட்டமொன்று ஏற்பாடு செய்து அவரைப் பேச வைத்ததாகவும், நாட்டின் யுத்த சூழ்நிலைக் காலங்களிலும், ஊரில் நடைபெற்ற நண்பர்களின் இலக்கியக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார் எனவும், இறுதியாக கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் இருவரும்  கலந்து கொண்ட நினைவுகளையும் பகிர்ந்தார். ஜீவாவின் கொழும்பு வீட்டிற்கும், யாழ். வீட்டிற்கும் சென்று பழகும் அளவிற்கு தங்கள் நட்பு இருந்ததாகவும், அவர் முற்போக்காளர் என்பதை விட சிறந்த பண்பாளராகவும் விளங்கினார் என தனது இனிய நினைவுகளை அசை மீட்டினார்.

       அடுத்து ஒரு காலத்தில் ஒரே குடையின் கீழ் இருந்து, இரண்டு துருவமாகப் பிரிந்த மாவோவின் அரசியல் சித்தாந்தத்தை பின்பற்றிவரும்  பொதுவுடமை அணியைச் சார்ந்த தோழர் சி.க. செந்திவேல் உரையாற்றினார். அவர் தனது ஆரம்ப உரையில், பலருக்கு தான் தோழர் ஜீவாவின் அஞ்சலி நிகழ்வில் பங்கு பற்றுவது, வியப்புக்கும், கேள்விக்கும் உள்ளாக்கப்படலாம் என்றுகூறி அதற்கான காரணங்களை மாவோவின் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை மனிதாபிமான அடிப்படையிலும் விளக்கினார். தான் மாணவனாக இருந்த போதே இலங்கைப் பொதுவுடமைக் கட்சியில் உள்ள இருவரின் பேச்சுக்களை விரும்பிக் கேட்டதாகவும் அதில் ஒருவர் அமரர் தோழர். வீ. பொன்னம்பலம் என்றும், மற்றவர் தோழர். ஜீவா என்றும் குறிப்பிட்டார். தங்களுக்கிருந்த சித்தாந்த வேறுபாட்டுக்கு மத்தியில் தங்களுக்கு இடையே நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவங்கள்,  கட்சிக்கு அப்பால் ஜீவாவிடம் காணப்பட்ட மனித நேயப் பண்புகள். மாற்றானையும் அரவணைக்கின்ற அவரின் குணம், தனது சஞ்சிகையில் நாடளாவிய ரீதியில் பலருக்கும் வாய்ப்பு அளித்தமை பற்றியும் குறிப்பிட்டார். தனது நீண்ட உரையில் வடமாகாணத்தில் இடதுசாரித்துவத்தின் வளர்ச்சியையும், அவற்றில் ஏற்பட்ட பிரிவினைகளையும், அதன் ஆரம்பகாலத் தலைவர்களையும் நினைவுபடுத்தி, ஜீவாவைப் பற்றிய உரையுடன் நகர்த்திச் சென்றது சிறப்பாக இருந்தது. 5 லட்சம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு முகவரியைத் தந்தவர்களில் ஜீவா, டானியல் போன்றவர்கள் முக்கியமானவர்கள் என்றும், அவர்கள் வழிவந்த கல்விமான்கள் தங்களை மறைத்து, சமூக நலனில் அக்கறையில்லாது வாழ்ந்து கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டித்தார். இன்றும் சமூக வேறுபாடுகள் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்ற யதார்த்தத்தையும் முன் வைத்தார்.

        அவரைத் தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக சமூகவியற் துறை விரிவுரையாளர் கலாநிதி சு. ஜீவசுதன் உரையாற்றினார். தனது ஆரம்ப உரையிலேயே தான் ஜீவாவின் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று அறிமுகம் செய்து கொண்டார். அப்படியான மனத்துணிவு தனக்கு ஜீவா மூலம்தான் ஏற்பட்டது என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். ஜீவாவைக் கண்டு கொள்ளாதவர்கள்; முற்போக்குச் சிந்தனையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட மல்லிகையையும், ஜீவாவையும் தங்களின் பேசு பொருளாகக் கையாண்டு வருவது தனக்கு வியப்பை அளிப்பதாகத் தெரிவித்தார். அவர் தனது சமூகவியற் கோட்பாட்டின் அடிப்படையில் மனித நடத்தைகளின் யதார்த்தத்தை அனுபவ ரீதியாகப் பகிர்ந்து கொண்டார். தனது 16ஆவது வயதில் அவர் சோவியத் யூனியனில் இருந்து வந்தபோது தங்கள் ஊரின் சமாஜம் ஒன்றில் பேசும்போது கேட்டதாகக் கூறினார்.  அதில் சமூக மாற்றத்திற்கு கல்வியும், பொருளாதாரமும் அவசியம் என்பதை வலியுறுத்தினார் என்றும், பொதுவாக அவர் மேட்டுக்குடி மக்களுடன் கோபத்தைக் காட்டுபவராக இல்லாமல், சமரசமாகப் போகும் வகையில் அவரின் படைப்புக்களும், பேச்சுக்களும் அமைந்ததை  அவருடன் நெருங்கிப் பழகிய படியால் அறிய முடிந்தது என்றார். அத்துடன் யாழ். பல்கலைக்கழகம் முதுகலைப் பட்டம் கொடுத்ததை ஏற்க மறுத்ததன் காரணத்தையும் விளக்கினார். நீண்ட காலம் ஜீவா தனது சமூகத்திலிருந்து விலகியிருந்தார் என்ற கருத்தையும் பதிவு செய்தார்.

       தொடர்ந்து உரை நிகழ்த்த வந்த த. அஜந்தகுமார் 2003இல்  மல்லிகையையும், ஜீவாவையும் அறிந்ததாகச் சொல்லி ஜீவாபற்றி ஒரு கனதியான உரையை சிறப்பாக வழங்கினார். கல்வி மறுக்கப்பட்ட ஒருவர், எப்படி கல்வியாளர்களால் மதிக்கப்பட்டார் என்பதையும், இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டு வெற்றிபெற்றவராக காணப்படுகின்றார் என்பதனையும் தமிழ்நாட்டில் பதிப்பாளராக விளங்கிய சி.வை. தாமோதரம்பிள்ளையுடன் ஒப்பிட்டு தனது பேச்சினை நிகழ்த்தினார். ஜீவாவின் திட்டமிடலும், கடின உழைப்பும்தான் அவரின் வெற்றிக்குக் காரணம் எனவும்,  அவர் மல்லிகையைப் பதிப்பிக்க எடுத்த முயற்சிகளையும், பெயர் வைப்பதிலும் கூட சாமானிய மக்களுக்கும் தெரிந்த பெயரை வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார் என்பதனையும் எடுத்துரைத்தார். அவரின் விநியோகமுறைகூட தனித்துவம் மிக்கது. சைக்கிளைப் பயன்படுத்தினார், இலங்கையில் காணப்பட்ட பெரும்பாலான சலூன்களுக்கு மல்லிகையைத் தவறாமல் அனுப்பி வைத்தார் என்பதனையும் குறிப்பிட்டார். இதன் காரணமாக பல முஸ்லீம் எழுத்தாளர்களை உள்வாங்கினார் என்ற ரீதியில் தனது கருத்தை முன்வைத்தார். தனது கதைகளில் புதிய உத்திகளையும் கையாண்டார் என்றும் சிறப்பாக ‘பாதுகை’ என்ற சிறுகதைத் தொகுதியின் கதாநாயகனான முத்து முகம்மதுவையையே  அதற்கான அணிந்துரையை எழுத வைத்ததாகவும் குறிப்பிட்டார். அவரின் மறைவு ஒரு நூலகத்தை இழந்த ஒரு பாரிய இழப்பு என்றும் குறிப்பிட்டார்.

 அதனைத் தொடர்ந்து மகன் திலீபனின் ஏற்புரை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மேமன் கவி தனது நன்றியறிதவைக் கூறினார். இறுதி நிகழ்வாக இந்த அஞ்சலி நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான கலாநிதி சு. குணேஸ்வரன் நன்றி கூறி நிகழ்வை முடித்து வைத்தார்.

என் மனவானில்

 ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள இடசாரிக் கொள்கையுடன் வாழ்ந்த மூத்த படைப்பாளி ஒருவருக்கு, இலங்கையின் வடபகுதியில் சமதர்மக் கோட்பாட்டை முதலில் உள்வாங்கி சமசமாஜக் கட்சியில் முதல் வேட்பாளராக நின்ற அமரர் தோழர் தர்மகுலசிங்கம் (Jeyam) பிறந்த வடமராட்சி மண்ணில் அஞ்சலி செலுத்தியது சிறப்பான அம்சம். “ஞானாலயம்” மண்டபம் கூட எம்மதமும் சம்மதமே என்ற சிந்தனையுடன் புத்தர், யேசு, சிவன் ஆகியவர்களின் அடையாளங்களுடன் காணப்பட்டதும் ஜீவா போன்ற பொதுவுடமைவாதிக்கு அஞ்சலி செய்ய மிகவும் பொருத்தமானதாக இடமாகத் தோன்றியது. அடுத்து என்னை வியக்க வைத்தது. அமரரின் உருவப்படம். அந்தப்படம் தம்பி சௌந்தரினால் வரையப்பட்டிருந்தது.  (நான் அவரின் ஓவியங்களை அசலை விட நகல் தான் சிறந்தது என்று பாராட்டுவேன் அவ்வளவிற்கு மிகச் சிறப்பான ஓவியர்) இதனை ஜீவாவின் மகன் திலீபன் சௌந்தரின் படத்தை செம்மைப்படுத்தி .  அனுப்பியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் தம்பி சௌந்தரின் அப்பா தங்கவடிவேல் மாஸ்ரரும், தம்பி திலீபனின் தந்தை ஜீவாவும் பொதுவுடமைக் கட்சியில் ஒன்றாக இருந்து மாஸ்கோ, பீக்கிங் கட்சி என பிரிந்து சென்றவர்கள். அவர்களின் பிள்ளைகள் ஒன்றாக இந்த அஞ்சலி நிகழ்வில் ஏதோ ஒரு புள்ளியில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

       நிகழ்விற்கு வந்திருந்தவர்களின் தொகையைப் பார்த்து விட்டு அஞ்சலிக் கூட்டத்தை அவசரப்பட்டு நிகழ்த்தி விட்டார்களோ என ஆரம்பத்தில் நினைத்துக் கவலைப்பட்டேன். உயில் அமைப்பாளர்களும், நண்பர் மேமன் கவியும் சேர்ந்து இணைய வாயிலாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தபடியாலும் முன் கூட்டியே அறிவித்துச் செயற்பட்டதாலும் ஆயிரத்துக் மேற்பட்டோர்; இந்த நிகழ்வை பார்வையிட்டுள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டோர் நேரடியாக இணைந்திருந்தனர்.

     தோழர் செந்திவேல் எதிர் அணியினர் ஒருவரின் அஞ்சலிக் கூட்டத்தில் பேசியதை நியாயப்படுத்தும் விதத்தில் மாவோவின் கருத்தொன்றை முன் வைத்தார். அதாவது 70 வீதம் ஒரே கொள்கையாவும், 30 வீதம் மாறுபட்ட கருத்துள்ளவர்களாக இருந்தாலும் அவர்களை ஆதரிப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளதாகும். இதே கருத்தை அமரர் எழுத்தாளர் ரகுநாதனும் கூறியதாகத் தலைவர் தனது உரையில் வழி மொழிந்தார். எனது ஆதங்கம் என்னவென்றால் கார்ள் மாக்ஸ் என்ற தத்துவ மேதையால் “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாதார் இல்லாத நிலை வேண்டும்” என்ற சிறந்த ஒரு பொதுவுடமைச் சித்தாந்தத்தை ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் விருப்பத்திற்கமைய வேறு வேறு அணிகளாகப் பிரிந்து போனதுடன் சிதைத்து விட்டோம் என்பதுதான். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொண்டு எல்லாருமே அழிந்து கொண்டு போவது தான் அவலம். இது எனது தனிப்பட்ட கருத்து.

 ஜீவசுதன் தனது உரையில் வாரிசு எவரையும் ஜீவா விட்டு விட்டுச் செல்லவில்லை என ஆதங்கப்பட்டார். ஆனால் ஜீவா அவர்கள் பல்வேறு ஆளுமைகளை தனது படைப்பின் மூலம் உருவாக்கிச் சென்றுள்ளார். அதற்குள் நீங்கள் கூட அடங்குவீர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். 2003 ஆம் ஆண்டு மல்லிகையையும், ஜீவாவையும் அறிந்த ஒரு இளைய தலைமுறையினரான தம்பி அஜந்தகுமாரிடமிருந்து   எந்தவித குறிப்புக்கள் இன்றி, மடை திறந்தது போன்று ஜீவாபற்றிய நினைவுப் பேச்சு அமைந்தது பாராட்டும் படியாக இருந்தது.

 உயில் கலை, இலக்கிய அமைப்பினர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஈழத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான தோழர் ஜீவாவிற்கு உலகளாவிய ரீதியில் மிகச் சிறந்த ஒரு அஞ்சலியையும், நினைவுப்  பகிர்வையும் நடாத்தி தங்களின் நன்றியைத் தெரிவித்துள்ளார்கள்.

நன்றி : செகா. சிவா முகநூல். 

ஞாயிறு, பிப்ரவரி 07, 2021

மல்லிகை ஜீவா – அஞ்சலியும் நினைவுப் பகிர்வும்

 


மல்லிகை ஜீவா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் நினைவுப் பகிர்வும் உயில் கலை இலக்கிய சங்கத்தினரால் ஞாயிறு (07/02/2021) மாலை 3.00 மணியளவில் பருத்தித்துறை ஞானாலயம் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய காலத்துப் பெரும் தொற்று நோய்த் துயரையும் கருத்திற் கொள்ளாது, உரிய நேரத்தில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் முதற்கண் உயிலின் நன்றி உரித்து.

நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளரும் உயிலின் ஆலோசகர்களில் ஒருவருமாகிய கொற்றை பி. கிருஷ்ணானந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். மல்லிகை ஜீவாவின் நிழற் படத்திற்கு ஈழத்து இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர்கள் சார்பில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அஞ்சலி நிகழ்வைத் தமது உரையின் மூலம் தொடக்கிவைத்தார் வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன் அவர்கள். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி உரைகளை ஈழத்தின் மூத்த பொதுவுடைமைவாதி சி.கா. செந்திவேல், யாழ்.பல்கலைக்கழகச் சமூகவியல்துறைத் தலைவர் கலாநிதி சு. ஜீவசுதன், கவிஞரும் ஆசிரியருமாகிய த. அஜந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். மல்லிகை ஜீவாவின் குடும்பத்தினர் சார்பில் மேமன் கவி அவர்கள் இணையவழியில் ஏற்புரை நிகழ்த்தினார். நன்றியுரையை உயில் செயற்பாட்டாளர்கள் சார்பில் கலாநிதி சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொண்டவர்களைத் தவிர Stream Yard இணைய வழிமூலம் 400ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை நேரலையாக மேமன் கவி அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
(ஒளிப்படங்கள் - நன்றி : ரகுவரன் பாலகிருஸ்ணன், குணேஸ்)
செவ்வாய், பிப்ரவரி 02, 2021

மல்லிகை ஜீவா : அஞ்சலியும் நினைவுப் பகிர்வும்


   அண்மையில் காலமான ஈழத்துச் சமூக இலக்கியப் போராளி மல்லிகை ஜீவா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வையும் அவர்கள் தொடர்பான நினைவுப் பகிர்வு நிகழ்வையும் உயில் கலை இலக்கிய சங்கம் ஒழுங்கு செய்துள்ளது. குறித்த நிகழ்வு 07.02.2021 அன்று ஞாயிறு 3.00 மணிக்கு, பருத்தித்துறை வி.எம். வீதியில் அமைந்துள்ள "ஞானாலயம்" மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உயில் -
கலை, இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர்கள்

புதன், ஜூலை 22, 2020

கற்கை நன்றே - கையேடுகளை வலயக் கல்விப் பணிமனைகளில் சேர்ப்பித்தல்வடமாகாணத்தின் 12 வலயங்களுக்கும் கற்கை நன்றே கையேடுகளைச் சேர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். அவ்வகையில் அச்சடிக்கப்பட்ட 1000 பிரதிகளையும் பகிர்த்தளித்திருக்கிறோம்.
 வடமராட்சி வலயம் 

 வவுனியா தெற்கு வலயம் 

  மன்னார் வலயம் 

யாழ் வலயம் 

 தென்மராட்சி வலயம் 
கற்கை நன்றேஉயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான இடர்கால சுயகற்றல் செயற்றிட்டத்தின் 2ஆம் கட்டமாக “கற்கை நன்றே” என்ற 134 பக்கங்களைக் கொண்ட கற்றல் உதவிக் கையேடுகளில் 1000 பிரதிகளை SEHA அமைப்பினரின் அனுசரணையோடு அச்சடித்திருக்கிறோம். அதிகமும் அலகு ரீதியான வினாவிடைகளை இம்முறை இதில் உள்ளடக்கியிருக்கிறோம். கடந்த மாதம் கொரோனா இடர்க்காலத்தைக் கருத்திற்கொண்டு “இடரிலும் தளரோம்” என்ற, ஒரு தொகை கற்றல் கையேடுகளை வடமராட்சியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தேவையறிந்து கேட்டுக்கொண்டவர்களுக்கும் இலவசமாக வழங்கியிருந்தோம்.

இக்கையேடுகளை வடமாகாணத்தின் கிராமப்புறப் பிள்ளைகள் அதிகமும் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் ஒப்படைத்திருக்கிறோம். இந்த முயற்சிக்குத் துறைசார்ந்த ஆசிரியர்கள் அலகுரீதியான வினாவிடைகளைத் தயாரித்துத் தந்து உதவியிருக்கிறார்கள். தொடர்ந்து பயணிப்போம்.

-உயில் செயற்பாட்டாளர்கள் சார்பில் சு.குணேஸ்வரன்-செவ்வாய், மே 19, 2020

இடரிலும் தளரோம் -கற்றல் கையேடுகொரோனா இடர்க்காலத்தைக் கருத்திற்கொண்டு க.பொ. த(சா/த) மாணவர்களுக்காக தமிழ்,கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு, ஆங்கிலம்,சமயம் ஆகிய பிரதான பாடங்களுக்கான வினாவிடைகளும் செயலட்டைகளும் கொண்ட 144 பக்கங்களில் கற்றல் கையோட்டினைத் தொகுத்திருக்கிறோம். அதிகமும் கிராமப்புறப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதற்காக (இலவசமாக) பொருத்தமானவர்களிடம் சேர்ப்பித்திருக்கிறோம். 

 சு.குணேஸ்வரன், இ. இராஜேஸ்கண்ணன்,செ.சுதர்சன், சி.விமலன், ஆ.வினோதன் (யாத்திரிகன்), த.விஜயசங்கர் (தானா விஷ்ணு), கே.எம்.செல்வதாஸ், க.சிறீரஞ்சன் ஆகிய நண்பர்களின் கூட்டிணைவில் இது சாத்தியமாகியிருக்கிறது.

(முதற்கட்டமாக வடமராட்சியில் எமது வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு குறித்த பிரதிகள் சிலவற்றை வழங்கியிருக்கிறோம்)

புதன், நவம்பர் 23, 2016

துவாரகனின் “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” கவிதை நூல் வெளியீடு இடம்பெற்றது.உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் துவாரகனின் (சு.குணேஸ்வரன்) “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” என்ற கவிதைத்தொகுதி வெளியீடு 06.11.2016 ஞாயிறு மாலை 3.45 மணிக்கு பருத்தித்துறை ஞானாலயம் மண்டபத்தில் சி. விமலன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் நூல் தொடர்பான உரைகளை தி. செல்வமனோகரன், தர்சன் அருளானந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

நூலின் முதற்பிரதியை இ. இராஜேஸ்கண்ணன் வழங்க கலாபூஷணம் ம. கணேசலிங்கம் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை எழுத்தாளர் க. நவம் வழங்கி வைக்க திரு ஐ. உதயரத்தினம், திரு மா. ரவிரதன், கவிஞர் தீபச்செல்வன், திரு ஆர். இராஜசேகரன், கவிஞர் கே. ஆர் திருத்துவராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஏற்புரையை நூலாசிரியர் துவாரகன் நிகழ்த்தினார். சித்திராதரன் நன்றியுரையை நிகழ்த்தினார்.

“எளிமையான செப்பனிடப்பட்ட சிக்கனமான மொழி, கோரத்தின் துயரப்பாடுகளைக் கவிமொழியாகக் கூறுகிறது. இழந்துபோன பொற்காலங்களை அனுபவங்களைக் கூறுகிறது. இரத்தமும் சதையுமான கதைகளை, கண்ணீரின் உதிரப்பூக்களாக வெளிப்படுத்துகிறது.” தர்சன் அருளானந்தன்

“துவாரகன் தனக்கேயுரிய மொழியில் எளிமையாக அதேவேளையில் குறியீட்டுத்தனத்துடன் 2009 ற்குப் பின்னான எம்மவர் வாழ்வை சமூக அரசியல் அசைவியக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். இதுவும் அரசியல் பிரதிதான். சமூக அசைவியக்கத்தை அடையாளம் துறக்கும் அல்லது விழுமியங்களை இழக்கின்ற யாழ்ப்பாண சமூக அரசியலை, தனிமனித சுயநல மனப்பாங்கை இந்தத் தொகுப்பு பிரதிபலிக்கின்றது.” செல்வமனோகரன்