ஞாயிறு, பிப்ரவரி 07, 2021

மல்லிகை ஜீவா – அஞ்சலியும் நினைவுப் பகிர்வும்

 


மல்லிகை ஜீவா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் நினைவுப் பகிர்வும் உயில் கலை இலக்கிய சங்கத்தினரால் ஞாயிறு (07/02/2021) மாலை 3.00 மணியளவில் பருத்தித்துறை ஞானாலயம் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய காலத்துப் பெரும் தொற்று நோய்த் துயரையும் கருத்திற் கொள்ளாது, உரிய நேரத்தில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் முதற்கண் உயிலின் நன்றி உரித்து.

நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளரும் உயிலின் ஆலோசகர்களில் ஒருவருமாகிய கொற்றை பி. கிருஷ்ணானந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். மல்லிகை ஜீவாவின் நிழற் படத்திற்கு ஈழத்து இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர்கள் சார்பில் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அஞ்சலி நிகழ்வைத் தமது உரையின் மூலம் தொடக்கிவைத்தார் வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன் அவர்கள். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி உரைகளை ஈழத்தின் மூத்த பொதுவுடைமைவாதி சி.கா. செந்திவேல், யாழ்.பல்கலைக்கழகச் சமூகவியல்துறைத் தலைவர் கலாநிதி சு. ஜீவசுதன், கவிஞரும் ஆசிரியருமாகிய த. அஜந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். மல்லிகை ஜீவாவின் குடும்பத்தினர் சார்பில் மேமன் கவி அவர்கள் இணையவழியில் ஏற்புரை நிகழ்த்தினார். நன்றியுரையை உயில் செயற்பாட்டாளர்கள் சார்பில் கலாநிதி சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொண்டவர்களைத் தவிர Stream Yard இணைய வழிமூலம் 400ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை நேரலையாக மேமன் கவி அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
(ஒளிப்படங்கள் - நன்றி : ரகுவரன் பாலகிருஸ்ணன், குணேஸ்)
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக