உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் துவாரகனின் (சு.குணேஸ்வரன்) “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” என்ற கவிதைத்தொகுதி வெளியீடு 06.11.2016 ஞாயிறு மாலை 3.45 மணிக்கு பருத்தித்துறை ஞானாலயம் மண்டபத்தில் சி. விமலன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் நூல் தொடர்பான உரைகளை தி. செல்வமனோகரன், தர்சன் அருளானந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.
நூலின் முதற்பிரதியை இ. இராஜேஸ்கண்ணன் வழங்க கலாபூஷணம் ம. கணேசலிங்கம் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை எழுத்தாளர் க. நவம் வழங்கி வைக்க திரு ஐ. உதயரத்தினம், திரு மா. ரவிரதன், கவிஞர் தீபச்செல்வன், திரு ஆர். இராஜசேகரன், கவிஞர் கே. ஆர் திருத்துவராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஏற்புரையை நூலாசிரியர் துவாரகன் நிகழ்த்தினார். சித்திராதரன் நன்றியுரையை நிகழ்த்தினார்.
“எளிமையான செப்பனிடப்பட்ட சிக்கனமான மொழி, கோரத்தின் துயரப்பாடுகளைக் கவிமொழியாகக் கூறுகிறது. இழந்துபோன பொற்காலங்களை அனுபவங்களைக் கூறுகிறது. இரத்தமும் சதையுமான கதைகளை, கண்ணீரின் உதிரப்பூக்களாக வெளிப்படுத்துகிறது.” தர்சன் அருளானந்தன்
“துவாரகன் தனக்கேயுரிய மொழியில் எளிமையாக அதேவேளையில் குறியீட்டுத்தனத்துடன் 2009 ற்குப் பின்னான எம்மவர் வாழ்வை சமூக அரசியல் அசைவியக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். இதுவும் அரசியல் பிரதிதான். சமூக அசைவியக்கத்தை அடையாளம் துறக்கும் அல்லது விழுமியங்களை இழக்கின்ற யாழ்ப்பாண சமூக அரசியலை, தனிமனித சுயநல மனப்பாங்கை இந்தத் தொகுப்பு பிரதிபலிக்கின்றது.” செல்வமனோகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக