புதன், ஜூலை 22, 2020

கற்கை நன்றே



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான இடர்கால சுயகற்றல் செயற்றிட்டத்தின் 2ஆம் கட்டமாக “கற்கை நன்றே” என்ற 134 பக்கங்களைக் கொண்ட கற்றல் உதவிக் கையேடுகளில் 1000 பிரதிகளை SEHA அமைப்பினரின் அனுசரணையோடு அச்சடித்திருக்கிறோம். அதிகமும் அலகு ரீதியான வினாவிடைகளை இம்முறை இதில் உள்ளடக்கியிருக்கிறோம். கடந்த மாதம் கொரோனா இடர்க்காலத்தைக் கருத்திற்கொண்டு “இடரிலும் தளரோம்” என்ற, ஒரு தொகை கற்றல் கையேடுகளை வடமராட்சியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தேவையறிந்து கேட்டுக்கொண்டவர்களுக்கும் இலவசமாக வழங்கியிருந்தோம்.

இக்கையேடுகளை வடமாகாணத்தின் கிராமப்புறப் பிள்ளைகள் அதிகமும் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் ஒப்படைத்திருக்கிறோம். இந்த முயற்சிக்குத் துறைசார்ந்த ஆசிரியர்கள் அலகுரீதியான வினாவிடைகளைத் தயாரித்துத் தந்து உதவியிருக்கிறார்கள். தொடர்ந்து பயணிப்போம்.

-உயில் செயற்பாட்டாளர்கள் சார்பில் சு.குணேஸ்வரன்-



செவ்வாய், மே 19, 2020

இடரிலும் தளரோம் -கற்றல் கையேடு



கொரோனா இடர்க்காலத்தைக் கருத்திற்கொண்டு க.பொ. த(சா/த) மாணவர்களுக்காக தமிழ்,கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு, ஆங்கிலம்,சமயம் ஆகிய பிரதான பாடங்களுக்கான வினாவிடைகளும் செயலட்டைகளும் கொண்ட 144 பக்கங்களில் கற்றல் கையோட்டினைத் தொகுத்திருக்கிறோம். அதிகமும் கிராமப்புறப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதற்காக (இலவசமாக) பொருத்தமானவர்களிடம் சேர்ப்பித்திருக்கிறோம். 

 சு.குணேஸ்வரன், இ. இராஜேஸ்கண்ணன்,செ.சுதர்சன், சி.விமலன், ஆ.வினோதன் (யாத்திரிகன்), த.விஜயசங்கர் (தானா விஷ்ணு), கே.எம்.செல்வதாஸ், க.சிறீரஞ்சன் ஆகிய நண்பர்களின் கூட்டிணைவில் இது சாத்தியமாகியிருக்கிறது.

(முதற்கட்டமாக வடமராட்சியில் எமது வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு குறித்த பிரதிகள் சிலவற்றை வழங்கியிருக்கிறோம்)





புதன், நவம்பர் 23, 2016

துவாரகனின் “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” கவிதை நூல் வெளியீடு இடம்பெற்றது.



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் துவாரகனின் (சு.குணேஸ்வரன்) “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” என்ற கவிதைத்தொகுதி வெளியீடு 06.11.2016 ஞாயிறு மாலை 3.45 மணிக்கு பருத்தித்துறை ஞானாலயம் மண்டபத்தில் சி. விமலன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் நூல் தொடர்பான உரைகளை தி. செல்வமனோகரன், தர்சன் அருளானந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

நூலின் முதற்பிரதியை இ. இராஜேஸ்கண்ணன் வழங்க கலாபூஷணம் ம. கணேசலிங்கம் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை எழுத்தாளர் க. நவம் வழங்கி வைக்க திரு ஐ. உதயரத்தினம், திரு மா. ரவிரதன், கவிஞர் தீபச்செல்வன், திரு ஆர். இராஜசேகரன், கவிஞர் கே. ஆர் திருத்துவராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஏற்புரையை நூலாசிரியர் துவாரகன் நிகழ்த்தினார். சித்திராதரன் நன்றியுரையை நிகழ்த்தினார்.

“எளிமையான செப்பனிடப்பட்ட சிக்கனமான மொழி, கோரத்தின் துயரப்பாடுகளைக் கவிமொழியாகக் கூறுகிறது. இழந்துபோன பொற்காலங்களை அனுபவங்களைக் கூறுகிறது. இரத்தமும் சதையுமான கதைகளை, கண்ணீரின் உதிரப்பூக்களாக வெளிப்படுத்துகிறது.” தர்சன் அருளானந்தன்

“துவாரகன் தனக்கேயுரிய மொழியில் எளிமையாக அதேவேளையில் குறியீட்டுத்தனத்துடன் 2009 ற்குப் பின்னான எம்மவர் வாழ்வை சமூக அரசியல் அசைவியக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். இதுவும் அரசியல் பிரதிதான். சமூக அசைவியக்கத்தை அடையாளம் துறக்கும் அல்லது விழுமியங்களை இழக்கின்ற யாழ்ப்பாண சமூக அரசியலை, தனிமனித சுயநல மனப்பாங்கை இந்தத் தொகுப்பு பிரதிபலிக்கின்றது.” செல்வமனோகரன்











சனி, நவம்பர் 05, 2016

அழைப்பிதழ் - துவாரகன் கவிதைகள்




   உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் துவாரகனின் (சு.குணேஸ்வரன்) “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” என்ற கவிதைத்தொகுதி வெளியீடு 06.11.2016 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறை வீ, எம். றோட், ஞானாலயம் மண்டபத்தில் சி. விமலன் தலைமையில் இடம்பெறவுள்ளது. உரைகளை தி. செல்வமனோகரன், தர்சன் அருளானந்தன், சித்திராதரன் ஆகியோர் நிகழ்த்துவர்.


ஞாயிறு, மே 15, 2016

குடிவரவாளன் நூல் அறிமுக நிகழ்ச்சி



உயில் மற்றும் சித்தம் அழகியார் ஏற்பாட்டில் வ.ந.கிரிதரன் எழுதிய “குடிவரவாளன்” என்ற நாவலின் அறிமுக நிகழ்வு 15.05.2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. நிகழ்வுக்கு குப்பிழான் ஐ.சண்முகன் தலைமை வகித்தார். அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நூல் தொடர்பான உரையை வேல் நந்தகுமார், ஜி.ரி கேதாரநாதன் ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை சித்திராதரன் நிகழ்த்தினார். கடும்மழையின் காரணமாக நிகழ்ச்சிக்கு வருவதாக வாக்களித்திருந்த பல நண்பர்கள் வரமுடியாதநிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நன்றிக்குரியவர்கள். இந்நிகழ்வின் மூலம் பெறப்பட்ட பணம், விரைவில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலரின் கல்வித்தேவைக்கு வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விபரங்களும் பின்னர் பதிவேற்றப்படும்.
படங்களும் பதிவும் : சு.குணேஸ்வரன்














சனி, மார்ச் 26, 2016

வடமராட்சியில் இடம்பெற்ற ‘மறுமலர்ச்சி’ அறிமுக நிகழ்வு




உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய “மறுமலர்ச்சி” இதழ்களின் தொகுப்புக்கான (1946-1948) நூல் அறிமுகநிகழ்வு 26.03.2016 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கரவெட்டி பிரதேச செயலக மண்டபத்தில் எழுத்தாளர் கோப்பாய் சிவம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் அறிமுகவுரையை டாக்டர் எம்.கே முருகானந்தன் (எழுத்தாளர்) நிகழ்த்தினார். கருத்துரைகளை எழுத்தாளர்கள் இராகவன், த. அஜந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். சிறப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சு. ஜீவசுதன் நிகழ்த்தினார். நிகழ்வில் அறிமுகப்பிரதிகளை கரவெட்டி பிரதேச செயலக கலாசாரப்பேரவைக்காக கலாசார உத்தியோகத்தர் ச. சிவஞானசீலனும், வடமராட்சி சுருக்கெழுத்துக்கழகத்தின் சார்பில் சு. குணேஸ்வரனும் பெற்றுக்கொண்டனர். நிகழ்வில் ஏற்புரையையும் நன்றியுரையையும் செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்தினார்.














பதிவும் படங்களும் :சு.குணேஸ்வரன்